முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாவது!
நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை). எல்லா உலக வடிவும் (சமஷ்டி பிரபஞ்சமும்), எல்லா உயிர்களின் வடிவமும் (விராட் ரூபி) ஆக விளங்குகிறான். அதனால் அவனே சாக்ஷாத்கார பிரம்மமாவான்! ருத்திர கோடிகள் அளவற்றவையில் இவனே மஹா சம்ஹார காரண ருத்திரன்.
இவனே ஸ்ரீகண்ட ருத்திரக் கடவுளின் சக்தியான மஹா விஷ்ணு.
மஹா விஷ்ணுவின் நான்கு மூர்த்தங்களில், இவன் வாசுதேவ மூர்த்தி,
எல்லா பிரஜாபதிகளுக்கும் இவன் பிரமன்.
ஒளியுள்ள பொருட்களில் இவன் அக்னி தேவன்.
திக் பாலகர்களில் இவன் “ஈசானன்”. அக்னியில் “சிவாக்னி”
அக்ஷரங்களில் பஞ்சாக்ஷரம்.
வித்யைகளில் பர வித்யை (ஸ்ரீ வித்யா).
யோகங்களில் அஷ்டாங்க யோகம்.
ஞானங்களில் இவன் சிவ ஞானம்.
ஈசனும், சக்தியும் சேர்ந்தது – முருகன் தத்வமசி வாக்கியப் பொருள், ஈசனின் ஐந்து முகங்களும், தேவியின் ஒரு முகமும் சேர்த்து முருகனுக்கு ஆறு முகங்களாயிற்று! ஈசனைக் குறித்து செய்யப்படும் வழிபாடும், அன்னையைக் குறித்து செய்யப்படும் பூஜையும் இவருக்கேயாகும். முருகனை பூஜித்தவர் சிவ சக்தி இருவரையும் பூஜித்தவராகிறார்.”
இருதயம் என்பது ஒரு குளம். அதுவே “சரவணப் பொய்கை”. இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.
இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை “தன்” வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
இதையே ஒரு சித்தர்
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி — என்கிறார்.
மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கையாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.
நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை “சண்முகம்” என்பர்.
இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை “சுப்ரமண்யம்” என்பார்கள்.
இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் “சண்முகம்” என்பார்கள்.
நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருண்டிருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு “குகன்” என்ற பெயர் ஏற்பட்டது. “குஹ்யம்” என்ற சொல்லுக்கு “மிக ரகசியமானது” என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் “குகன்” என்ற பெயர் பெற்றான்.
வள்ளி, தேவசேனா தத்துவம்; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.
தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.
மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே “மலையின்” தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற “ஞானமே முருகன்”. அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.
தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே “சத்திய வாக்காகி” விடும்.
“சரவணபவ” என்கிற மந்திரத்துக்கு முன் …
“ஓம்” சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.
“ஓம் ஹ்ரீம்” சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.
“ஓம் க்லீம்” சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.
“ஓம் ஐம்” சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.
“ஓம் ஸ்ரீம்” சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.
“சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா”
என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.
“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||
நன்மை என்கிற ஒரு விடயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். உலகில் இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் மற்றொன்று எதிர்ப்பதமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு மனிதன், சக மனிதனின் மீது கொண்ட பொறாமை போட்டி எண்ணங்களால் அவனுக்கு எதிரியாக மாறி, அந்த மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதை போன்று வேறு எந்த ஒரு உயிரினமும் செயல்படுவதில்லை. என்ன தான் நாம் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் செயல்பட்டாலும் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரியாக கருதுபவர்கள் பலர் இருப்பதை நம்மால் அறிய முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலகில் இருக்கின்ற எந்த ஒரு மனிதருக்கும் நேரடி அல்லது மறைமுக எதிரிகள் அறவே இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியாது. நம் சொந்த திறமையின் காரணமாக பொருளாதார வளர்ச்சி, புகழ் போன்றவற்றை நாம் அடைவதை, நம்மை சுற்றி இருக்கும் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நம்மை அழிப்பதற்கு நேரடியான சில முயற்சிகளில் இறங்குகின்றனர். மேலும் சிலர் செய்வினை மாந்திரீகம் போன்ற மறைமுக வழிகளையும் கையாளுகின்றனர்.
புராணங்களின்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாக தோன்றியவர் தான் ஆறுமுகம் எனப் பெயர் பெற்ற முருகப்பெருமான். தேவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சூரபத்மன் மற்றும் அவனின் அரக்கர் படையை அழிப்பதற்காகவே அவதாரம் செய்த அந்த முருகப்பெருமானின் சாந்நித்தியத்தை வரவழைத்து எதிரிகள் தொல்லையையும் அவர்களால் செய்யப்பட்ட மாந்திரீக ஏவல்களையும் ஒழிக்கும் ஒரு ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம்.
சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும். முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.
ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும், முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்றும் அழைக்கிறோம்.
இந்த மந்திரத்தை, ஜெபிப்பதால், அல்லது கேட்பதால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எல்லாம் ஜெயமாகும்.
உங்கள் இல்லங்களில், தினமும் இது ஒலிக்கட்டும், இறை அருள், சித்த குரு அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
சத்ரு சம்ஹார அர்ச்சனையின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது.
Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST
Subscribe to get the latest posts sent to your email.

